Sunday 25 November 2012

கூகுள் சேவைக்கு சீனா தடை இந்தியாவில்???????


சென்ற நவம்பர் மாதம் 9ஆம் தேதி அன்று, தொடர்ந்து பல மணி நேரத்திற்கு, கூகுள் இணைய சேவைகளுக்கு, சீனா தடை செய்துள்ளதாக, கூகுள் அறிவித்துள்ளது. அதாவது கூகுள் தரும் தேடல் மற்றும் மெயில் வசதிகள் போன்றவை (Gmail, Play, Docs, Maps, and Analytics) சீனாவில் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டன. கூகுள் தரும் வீடியோ வசதி (YouTube), 2009 ஆம் ஆண்டிலிருந்தே சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது அதுமட்டும் இல்லாமல் Google+, Twitter, Dropbox, Facebook and Foursquare ஆகிய நிறுவனங்களின் தளங்கள் தொடர்ந்து தடை செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளன மற்ற வசதிகளுக்கும் அவ்வப்போது தடை ஏற்படுத்தப்பட்டன. உலகின் பல நாடுகளில் தன் சேவைகள் எப்படிச் சென்றடைகின்றன என்பதனை “Transparency Report” என்ற ஓர் இணைய அறிக்கை மூலம் கூகுள் அறிவித்து வருகிறது. (காண்க:http://www.google.com/transparencyreport/traffic/) அதில் இந்த தகவல் காணப்படுகிறது. சீனாவில் மேற்கொள்ளப்படும் இன்டர்நெட் பணிகளை மேற்பார்வையிடும் Greatfire.org என்ற முகவரியிலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை:
இரண்டு ஆண்டுகளாகவே, சீனாவுடன் அதன் தணிக்கை விதிகள் குறித்து கூகுள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. கூகுள் தேடல் தளத்தில் இடப்படும் சொற்களைத் தணிக்கை செய்திட சீனா உரிமை கேட்கிறது. ஆனால் கூகுள் அதனை ஏற்கவில்லை. இதனால், 2010 ஆம் ஆண்டில், சீனாவில் இயங்கிய தன் சர்வர்கள் அனைத்தையும், ஹாங்காங் நாட்டுக்கு கூகுள் மாற்றியது. சீன அதிகாரிகள் விதித்த தடைகள் இந்த நடவடிக்கைக்குக் காரணமாய் இருந்தன. மேலும், சீனாவில் இருந்துதான், பல ஹேக்கர்கள் இணைய தளங்களுக்குக் கெடுதல் ஏற்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டினையும் கூகுள் வைத்தது. சீன அரசாங்கத்தின் தணிக்கை விதி முறைகளைத் தாங்கள் ஏற்க முடியாது என கூகுள் நிறுவனத் தலைவர் அறிவித்தார்.

கூகுள் தவிர வேறு எந்த இணைய தளங்கள்  முடக்கப்பட்டுள்ளன:
சென்ற மாதம்(அக்டோபர் 2012), நியுயார்க் டைம்ஸ் என்ற இதழின் இணைய தளத்தையும் சீனா தன் நாட்டில் தடை செய்தது. சீன நாட்டின் தலைமை அமைச்சர் குறித்து தவறான தகவல்களைத் தந்ததனால் இந்த இணையதளம் தடை செய்யப்பட்டதாக  சீனா கூறியுள்ளது.  அதே போல Bloomberg News என்ற இதழின் இணைய தளமும் தடை செய்யப்பட்டது. 

இணைய தளத்தை சீனா எப்படி தடை செய்கிறது:
அதிக திறன் கொண்ட, இணையத் தடை செய்திடும் வசதிகளை சீனா உருவாக்கி வைத்துள்ளது. பல்லாயிரக் கணக்கான பொறியாளர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்டர்நெட்டில் தங்கள் நாடு, மக்கள் குறித்து வெளியாகும் தகவல்களைக் கண்காணித்து, உடனே அவற்றை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

வேறு எந்த நாட்டில் கூகிள் இணைய தளத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனா மட்டுமின்றி, முன்பு செப்டம்பர் மாதம், ஈரான் அரசும் கூகுள் மெயில் சேவைக்குத் தடை விதித்தது. ஈரான் நாட்டின் அதிகாரிகள் பலர் இது குறித்துக் கேள்விகளை எழுப்பிய பின்னர், ஓரளவிற்கு மட்டும் தடையை நீக்கியது. ஈரான் சில வேளைகளில், இன்டர்நெட் முழுவதையும் தடை செய்து, தன் நாட்டிற்கு மட்டுமான நெட் சேவையினை இயக்கியது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, தன் தலைவர்களை மாற்றும் சீன அரசாங்கத்தின் மிக முக்கிய கூட்டத்தின் போது இது நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சீனாவில் தடை ஏற்பட்டுள்ளதால் கூகுள் நிறுவனத்திற்கு என்ன பதிப்பு:
மிகப் பெரிய அளவில் ஜனத்தொகை கொண்டுள்ள சீனாவில், கூகுள் தடை பெறுவது, கூகுள் நிறுவனத்திற்கு பொருளாதார ரீதியாக இழப்பைத் தரும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். விளம்பர வருவாய் பெருமளவில் இழக்கப்படும் என கணக்கிடுகின்றனர். இந்த கண்ணா மூச்சி விளையாட்டு எப்படி முடியும் என அனைத்து நாடுகளும் எதிர்பார்த்து வருகின்றன.


இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா?
இந்தியாவைப் பொறுத்தவரை, கூகுள் தளங்களில் உள்ள சில ஆட்சேபகரமான செய்திகள் மற்றும் தகவல்களை நீக்குமாறு, இந்திய நீதிமன்றங்கள் தொடர்ந்து ஆணைகளை வழங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் தனிநபர் குறித்த தகவல்கள் மற்றும் மத சம்பந்தமான தகவல்களே ஆகும்.
சென்ற ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், 20 கோர்ட் ஆணைகள் மூலம் 487 தகவல்கள், கட்டுரைகள் நீக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த அளவிற்கு தடை ஆணை வழங்கப்படவில்லை. தனி நபர்கள் தொடுத்த வழக்குகளின் அடிப்படையிலேயே இந்த ஆணைகள் வழங்கப்பட்டன. சென்ற 2011 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஐந்து ஆணைகள் மூலம் ஒன்பது தகவல் கட்டுரைகள் நீக்கப்பட, நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. 
கூகுள் இந்த ஆணைகளை நிறைவேற்றியதா? இந்த ஆண்டு தரப்பட்ட ஆணைகளில் இதுவரை 33% மட்டுமே நீக்கப்பட்டதாகத் தெரிகிறது. நீதிமன்றங்கள் மூலம் கூகுள் பெறும் தடைகளின் எண்ணிக்கையில், இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. அமெரிக்க நீதிமன்றங்கள் இதே காலத்தில் 209 ஆணைகளை வழங்கி உள்ளன. அடுத்த இடங்களில், ஜெர்மனி, பிரேசில், துருக்கி, பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா ஆகியவை உள்ளன.

0 கருத்துக்கள்:

Post a Comment